நாமசங்கீர்த்தனம் | கலியுகத்தில் பகவானை அடைய வைக்கும் ஓர் எளிய வழி! கண்ணன் நேரே இல்லாதபோதும், திரௌபதியைக் காப்பாற்றிய கோவிந்த நாமம் .. பகவான் எங்கோஇருந்தாலும் நம்மை என்றும் அருகிலிருந்து காப்பாற்றும் அவன் இனிய திருநாமங்கள் .. தினமும் பகவன்நாமங்களை வாய்விட்டு ஆனந்தமாக சொல்வோம்! அவன் குணங்களை அனுபவிப்போம்! பாடுவோம் கோவிந்த நாமம்! தட்டுவோம் கைகளை! ஆழ்வார் கூறியபடி ஆடுவோம் கோவிந்த நாமம் சொல்லி! தொலையட்டும் பாவங்கள் அதன் அதிர்வுகளில்!

இவ்வுலகத்தவர்களும், அவ்வுலகத்தவர்களும், தேவர்களும் ஶ்ரீனிவாஸ பெருமாளுக்குப் புஷ்பத்தைக் கொண்டு அர்ச்சனை செய்வதாலேயே புஷ்ப மண்டபம் என்று பெயர் பெற்ற திவ்யதேசம். மேலுலகத்தில் இருப்பவர்கள் இறங்கி வந்து அர்ச்சனை செய்யட்டும் .. கீழுலகத்திலிருப்பவர்கள் ஏறி வந்து அர்ச்சனை செய்யட்டும் என்று இரண்டு உலகத்திற்கும் இடைப்பட்ட திவ்யதேசமான திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கிறார். அப்படிப்பட்ட ஶ்ரீனிவாஸனை ஆழ்வார்கள் அனுபவித்த விதத்தில் நாமும் சிறிது அனுபவிக்க ஆரம்பிப்போம்!

‘உலகில் சாந்தி நிலவ வேண்டும்!’ என்றே அனைவரும் விரும்புகிறோம். எப்படி சாத்தியம்? வழி சொல்கிறார் பொய்கையாழ்வார் இந்த அழகான பாசுரத்தில் ‘ பகவான் நம்மைக் காப்பதற்காக நம் உள்ளத்திலேயே உள்ளார். தன்னை நினைப்பவர்கள் மனதில் எப்பொழுதும் உள்ளார். அதே பகவான்தான் மற்றவர் உள்ளத்திலும் உள்ளார் என்ற புரிதல் வந்து விட்டால்! உலகில் சாந்தி நிலவும்! அதற்காகத் திருவேங்கடவனை வேண்டுவோம். மனதிற்கு இனிய இசையோடு கூடிய இந்த பாசுரத்தைப் பாடி! 🙏🏼

பகவானின் படைப்பான இயற்கை அழகை ரசிப்பதால் மன அழுத்தம் விலகும். மனதில் சந்தோஷம் பிறக்கும். அத்தகைய எழில் கொஞ்சும் இயற்கை வர்ணனையில் தோய்த்து, ஆழ்ந்த பொருள்களை பூதத்தாழ்வார் இந்த அழகிய பாசுரத்தில் தந்திருக்கிறார். ஆனந்தமாகப் பாடுவோம். ஆழ்பொருள்களும் புரிய வேண்டும் என்று வேண்டுவோம்!

மற்றுமொரு இயற்கை வர்ணனையோடு, வராஹபெருமானின் மலையை பேயாழ்வார் வர்ணிக்கும் பாசுரத்தை, துள்ளல் இசையுடன் கூடிய இந்த பாடலைப் பாடி அனுபவிப்போம்!

வினைதீர்க்கும் வேங்கடவன் இருக்கும் திருமலையைத் தொட்டாலே பாவங்கள் விலகும். சந்தோஷம் மலரும். அதை உணர்த்தும் வகையில் அமைந்த திருமழிசைப்பிரானின் இந்த அழகிய பாசுரத்தைப் பாடுவோம்! மனதிற்கு உற்சாகம் அளிக்க வல்ல இனிய இசையோடு!

நம்மை மலையேற வைக்கும் இசையோடு, மலையின் குளிர்ச்சியை உணர வைக்கும் காட்சியோடு, கோவிந்தனிடம் இருந்த குலசேகராழ்வாரின் பக்தியை அனுபவிக்க வைக்கும் குரலோடு, இந்த அழகிய பாடலை அனுபவிப்போம்! மலையேறி .. படியையடைந்து .. பவளவாய் காணும் அனுபவம் பெறுவோம்!

பகவானின் அடியவன்’ என்று சங்குசக்கரப்பொறி பெற்றுக்கொண்டவுடன் கிடைக்கும் மனநிம்மதியையும், கவலைகள் நீங்கி பகவானை அனுபவிக்கும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்கும் இந்த இனிய பாடலை அனுபவிப்போம். ராமானுஜரிடம் சங்கு சக்கரம் பெற்றுக்கொண்ட திருவேங்கடமுடையானைப் பார்த்துப் பாடுவோம் .. பெரியாழ்வார் பாடியபடி ஆனந்தமாக .. தாமோதரா!! சதிரா!!

செல்வத்துக்கு அதிபதியாகிய லக்ஷ்மியைத் திருமார்பில் கொண்டவர் திருமால். மேகம் போன்ற கருணையுடைய அந்த திருமாலை அழைக்க, ஆண்டாள் மேகத்தைத் தூதாக விட்ட இந்த இனிய பாடலை அனுபவிப்போம்! குழந்தை ஆண்டாள் அழைத்த குரலுக்கு வந்து, ஆண்டாளின் பிரிவாற்றாமையைப் போக்கிய திருமாலை, நாமும் அழைப்போம்… ஆண்டாள் அடி தொடர்ந்து பாடுவோம் .. திருமாலே! திருமாலே!

அனைவரும், தன் அடியவர் மூலமே தன்னை வந்தடைய வேண்டும் என்பதே பகவானின் விருப்பம். அதையறிந்த ஆண்டாளும், குழந்தைக்கே உரிய சிறப்பு உரிமையோடு, திருமலை சம்பந்தமுடைய மேகங்களைத் தனக்காகப் பெருமானிடம் வாதாடச் சொன்ன அழகான பாசுரம். நாமும் அப்படிப்பட்ட ஆண்டாளின் அடியவர் என்ற பெருமிதத்துடன் ஆண்டாள் பாடிய பாடலை ஆனந்தமாகப் பாடி அனுபவிப்போம்!

உலகத்தின் படைப்புக்குக் காரணமான அரங்கனே, பிறப்பு இறப்புச்சுழலிலிருந்து நமக்கு விடுதலை அளிக்க வல்லவன்; அந்த அரங்கனேதான் நமக்கு அந்த ஞானத்தைக்கொடுத்து நல்வழிப்படுத்த வேங்கடவனாக நிற்கிறான் என்பதைத் திருப்பாணாழ்வார் அழகாக உணர்த்திய பாசுரம். ஆழ்வார் அனுபவித்த அரங்கனின் திருமேனி அழகை, இனிய இசையோடு நாமும் அனுபவிப்போம்! பிறப்பறுத்து முக்தி அளிக்க, வேங்கடவனான அரங்கனை வேண்டுவோம்!

தான் கண்டுகொண்ட நாராயண நாமத்தின் மகிமையை நமக்குணர்த்தி நல்வழிகாட்டுகிறார் திருமங்கையாழ்வார் இந்த அழகிய பாசுரத்தில். பகவானை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால் முதலில் நெஞ்சத்தின் ஒத்துழைப்பு வேண்டும். அதனால், ‘நமக்கு முக்தியளிக்க வல்ல பெருமான் இருக்கும் அழகிய இடமான திருவேங்கடத்தை அடை நெஞ்சமே!’ என்றழைக்கிறார். நாமும் ஆழ்வார் காட்டிய வழியில், நம் நெஞ்சத்தின் ஒத்துழைப்பை வேண்டி மனதிற்கினிய இந்தப் பாடலைப் பாடுவோம்!

ஒரு தாய்க்குப் பெருமை சேர்க்கும் சிறந்த பண்புகள், குழந்தைகளை மன்னித்தல் மற்றும் அவர்கள் செய்த தவறுகளை மறத்தல். உலகத்திற்கே தாயான பெருமானோ கருணையே வடிவானவர். பல பிறவிகளாக நமக்குத் தாயாகக் கருணை பொழியும் பெருமானை மறந்து, ஒரு பிறவியில் ஏற்பட்ட சொந்தபந்தங்களுக்காக வாழ்வைக் கழிக்கிறோம். மனிதப் பிறவியின் பயனே நம் அனைவருக்கும் தாயான பெருமானின் கருணையை உணர்ந்து அவரிடம் சரணடைதலேயாகும். இதையறியாமல் இவ்வளவு நாள் ஐந்தறிவுடைய நாயாக இருந்த தன்னை மன்னித்து ஏற்க வேண்டும் என்று நம் சார்பாகத் திருமங்கையாழ்வார் பெருமானை வேண்டும் பாசுரம். நாமும், மனதை உருக வைக்கும் இப்பாடலைப் பாடி, அவ்வண்ணமே வேங்கடவனை வேண்டுவோம்!

பகவானிடம் நெஞ்சைச் செலுத்தியவுடன் அவருக்கும் நமக்குமிருக்கும் உறவு புரிய ஆரம்பிக்கும். பல பிறவிகளாக நாம் அவரைப் புரிந்து கொள்ளும் வரைப் பொறுமையாகக் காத்திருந்த தாயான பகவானின் அன்பு புரியும். அப்படிப்பட்ட தாய்க்குத் தொண்டு புரியாமல் இத்தனை நாள் சுயநலத்தோடு பாவியாக இருந்து விட்டோமே என்ற வருத்தம் தோன்றும். அந்த உணர்வைத்தான் இந்த பாசுரத்தில் மனமுருகிப் பாடி வெளிக்காட்டுகிறார் திருமங்கையாழ்வார். நம்மைத் திருவேங்கடத்துக்கே அழைத்துச் செல்லக்கூடிய காட்சியோடும் .. நம் நன்றியுணர்வைப் பிரதிபலிக்கும் பாடலோடும் .. மனதிற்கு இனிய இசையோடும் நாமும் இந்தப் பாசுரத்தை அனுபவிப்போம். பெருமானுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று வேங்கடவனைப் பிரார்த்திப்போம்!

நம் குற்றங்களைப் பொறுத்து, ஆசையுடன் நம்மிடமும் தொண்டு ஏற்றுக்கொள்ளும் பெருமானுக்கு, மேன்மேலும் தொண்டு புரிய வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். கைங்கர்யத்தின் ருசி உணர்ந்தபின் எக்காலத்திலும், எல்லா இடத்திலும் அனைத்து நிலைகளிலும் பிரியாது, குற்றமற்ற கைங்கர்யங்கள் செய்யும் பேறு கிட்ட வேண்டும் என்று, கிருஷ்ணபக்தியின் மறு உருவமான நம்மாழ்வார் வேங்கடவனைப் பிரார்த்திக்கும் பாசுரம். நாமும், பெருமான் கைங்கர்யத்துடன் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் கைங்கர்யமும் செய்யும் பேறு கிட்ட வேண்டும் என்று பிரார்த்தித்து இந்த அழகிய பாசுரத்தைப் பாடுவோம்!

நம் அருகிலிருக்கும் பக்தர்கள் நம்மை ஆச்சார்யர்களின் அருட்பார்வைக்கு ஆளாக்குவார்கள். ஆச்சார்யரோ தாயாரின் அருட்பார்வை பெற்றுத் தருவார். தாயாரின் கடைக்கண் பார்வை நம்மைப் பெருமானின் தயைக்கு ஆளாக்கும். பெருமானின் கருணைநதியில் நீராட, ஆச்சார்யர்கள் வழிகாட்டுதலுடன், நமக்கேற்ற ஆழத்திற்குத் தகுந்த படித்துறையில் இறங்குவோம். பக்தர்களுடன் சேர்ந்து நீராடும் ஆனாந்தானுபவம் தரும் உற்சாகத்தை இன்றைய பாடலில் அனுபவிப்போம். ஆழ்வார் காட்டிய வழியில், அலர்மேல்மங்கையுறை மார்பன் அடிக்கீழமர்ந்து புகுவோம்!